Monday, May 09, 2016

தினம் ஒரு பாசுரம் - 72

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
      அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
      விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்
      இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே


-- குலசேகர ஆழ்வார் (பெருமாள் திருமொழி)

சேர மண்டல மன்னனாக இருந்து, ராமபிரான் மீது பரம பக்தியில் திளைத்து வாழ்ந்த குலசேகரப் பெருமாள் அருளிய திருப்பாசுரத்தை இன்று அனுபவிப்போம். குலசேகர ஆழ்வாரை ஏன் ”பெருமாள்” என்கிறோம்? வைணவப் பெருந்தகைகள், இராம காவியத்தில் வரும், திருமால் அவதாரமான ஸ்ரீராமனுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வுகளை, விவரிக்கையில், தன்னை ராமனாக பாவித்துக் கொண்டு அவை தனக்கு நிகழ்ந்தது போல ஆழ்வார் எண்ணியதால், அவருக்குப் “பெருமாள்” என்ற அடைமொழி ஏற்பட்டது. 


  இப்பாசுரம், ராமவதாரம் முடிந்து, திருமால், அயோத்தியில் வாழ்ந்த அனைத்து உயிர்களுக்கும் பரமபத பதவி அருளி, வைகுந்தம் புகுவதை கவிதை நயத்தோடுச் சொல்கிறது. 


பொருளுரை:

அன்று - இராமவதாரம் முடிவுற்ற அந்நாளில்
சராசரங்களை - (அயோத்தியில் வாழ்ந்த) எல்லா உயிர்களுக்கும்
வைகுந்தத்து ஏற்றி - பரமபதம் (ஆகிய பெரும்பேறு) அருளி
அடல் அரவப் - வலிமை மிக்க பாம்புகளுக்குப்
பகையேறி - பகைவனான கருடன் மீது ஏறி
அசுரர் தம்மை வென்று - அரக்கர்களை வென்று
இலங்கு மணி - ஒளி வீசும் மரகத மணிக்கு ஒப்பான
நெடுந்தோள் நான்கும் தோன்ற - நீண்ட நான்கு திருக்கரங்களுடன் காட்சியளித்து
விண் முழுதும் எதிர் வரத் - வானவரும், வைகுந்த அடியார்களும் எதிர்கொண்டு வரவேற்று உபசிரிக்க
தன் தாமம் மேவி - தனது இருப்பிடமான (பரமபதம் எனும்) வைகுண்டத்தில் பொருந்தி அமைய வேண்டி
சென்று  - (பூவுலகம் விட்டுச்) சென்று, 
இனிது வீற்றிருந்த - (தனது கல்யாண குணங்கள் எல்லாம் தோன்றும்படியாக) இனிமையாக எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னைத் - சர்வலோக ரட்சகனான திருமாலும்,
தில்லை நகர்த் திருச்சித்ரகூடம் தன்னுள் - தில்லை நகர் திருச்சித்திரக்கூடம் எனும் திவ்விய தேசத்தில்
என்றும் நின்றான் - என்றும் (அடியவர்க்கு அருளவேண்டி அர்ச்சாவதார திருக்கோலத்தில்) நிலை பெற்ற
அவன் இவனென்று - சக்கரவர்த்தித் திருமகனும், ஒருவனே எனத் தெளிந்து,
ஏத்தி நாளும் -  தினமும் துதித்து
இறைஞ்சுமினோ எப்பொழுதும்- எப்போதும் போற்றி வழிபடுவீர்
தொண்டீர் நீரே - அடியவரான நீங்கள் அனைவரும்!


திருத்தலக் குறிப்புகள்:


 சிதம்பரம் தில்லை நடராஜர் குடிகொண்டுள்ளது பொன்னம்பலம் எனில், அதே கோயில் பிரகாரத்தின் உள்ளே தனிச்சன்னதியில் கோவிந்தராஜப் பெருமாள் குடிகொண்டுள்ளதை திருச்சித்திரகூடம் என்கிறோம். இது 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றாம். பெருமாள் போக சயனத்தில் (மகிழ் நித்திரை) பள்ளி கொண்ட திருக்கோலத்தில் உள்ளார். (தர்பசயனம்-திருப்புல்லாணி; புஜங்கசயனம்-ஸ்ரீரங்கம்; மாணிக்கசயனம்-திருநீர்மலை) மூலவரை சக்கரவர்த்தித் திருமகன் என்றும் போற்றுகின்றனர். வீற்றிருந்த திருக்கோலத்தில் உத்சவர்: தேவாதி தேவன் எனும் பார்த்தசாரதி. சித்திரக்கூடத்துள்ளான் என்ற திருநாமத்துடன் இன்னொரு உத்சவர் உபய நாச்சிமாருடன் அருள் பாலிக்கிறார்.சிவபெருமானின் ஆனந்த நடனத்தை அகக்கண்ணால் கண்டு மகிழ்ந்திருந்த திருமால், அதை தினமும் நேரில் கண்டு மகிழ்வுற இங்கே பள்ளி கொண்டாரோ என்று எண்ணும்படியாக, நடராஜானின் திருத்தாண்டவக் கோலத்தை அனுபவிக்கும் வண்ணம், நேர் எதிரே கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இங்கு கருடனுக்கு என்று ஒரு சன்னதியும், பலிபீடமும், சிறிய பிரகாரமும்  மகாலட்சுமிக்கு எனத் தனிச்சன்னதியும் உள்ளன. இத்திருத்தலத்தை வைணவர்கள், புண்டரீகபுரம் என அழைப்பதால், பிராட்டியின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும்.  முதன் முதலில் இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டியதும் இம்மன்னனே என்றும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே!" 


என திருமங்கை ஆழ்வாரும் இப்பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் (மொத்தம் 32 பாசுரங்கள்)

குலசேகராழ்வாரே இன்னொரு திருப்பாசுரத்தில்

அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தி என்னும் அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை
செங்கண் நெடுங்கருமுகிலை இராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண்குளிரக் காணு நாளே!


அந்த இராகவனை பக்திப் பேருவகையில் உருகியுருகிப் போற்றியிருக்கிறார்! (மொத்தம் 11 பாசுரங்கள்)

பாசுரக் குறிப்புகள்: 

ராமனுக்கு முன்னமே, இலக்குவனான ஆதிசேஷன் வைகுண்டம் சென்று விட, தம்பியை பிரிந்திருக்கவியலாத ராமபிரானாகிய திருமாலும் தனது இருப்பிடமான வைகுண்டம் (”இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்” என்ற ராமானுஜ நூற்றந்தாதிப் பாசுரத்தை நினைவு கூரவும்!) செல்ல விழைகையில், அயோத்தி வாழ் மாந்தரும் இன்னபிற உயிர்களும், ராமபிரானைப் பிரிய வேண்டியதை எண்ணி மிக்க  துயரம் கொண்டனர். ராமனைச் சரணடைந்து தங்களையும் அவருடன் கூட்டிச்செல்ல வேண்ட, ராமனும் அவ்வண்ணமே அருள, பலரும் புடை சூழ, ஸ்ரீராமனும் சரயு நதியில் இறங்கி, தன்னடிச் சோதியான பரமபதத்திற்கு கம்பீரமாக எழுந்தருளிய அற்புத நிகழ்வே இப்பாசுரம் சொல்லும் செய்தியாம்.


திருமாலுக்கே உரிய அந்த நான்கு திருக்கரங்களும் வெளிப்பட, கருடன் மேல் கம்பீரமாய் ஏறி, அசுரரை வென்று, தேவாதி தேவரும், முனிவரும் வரவேற்க, அந்த சக்கரவர்த்தித் திருமகனானவன் வைகுந்த நாயகனாய் திருவடிவம் மாறி, பரமபதம் மேவும் திருக்காட்சியை சற்றே அகக்கண்ணில் நோக்கினால், குலசேகர ஆழ்வாரின் பக்தியில் விளைந்த கவி நயமும், வர்ணனையின் பேரழகும் புலப்படுகிறது அல்லவா!!!
சராசரம் - அசையும், அசையாப் பொருள்கள்; உலகம்.

தாமம் - பெருமாளின் இருப்பிடமான வைகுண்டத்தைக் (பரமபதம்) குறித்தாலும், அச்சொல்லுக்கு இன்னும் பல பொருள்கள் உண்டு.
பூமாலை; கயிறு; வடம்; நகரம்; ஊர்; மலை; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு; பதினெட்டுக்கோவையுள்ள மாதர் இடையணி; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று (நன்றி: அகராதி.காம்)

--- எ.அ.பாலா

4 மறுமொழிகள்:

sury siva said...

பெருமாளே ! உனக்குப் பெருமாள் எனப் பெயரிட்டது யாரோ எனப் பல பல ஆண்டு நான் கேட்டும் தெரியாத இருந்த நிலையில்,
பெருமாளே தன்னை ஒரு பெருமாள் ஆக நினைத்து
ஆழ்வாரை அனுப்பி எனக்குப் புரியவைத்த
பெருமாளே ! உனக்கு நன்றி.

சுப்பு தாத்தா.

said...

அழகான பாசுரம். திருப்பாவை விளக்கம் எழுதுகையில் பாசுரம் மேய்ந்த பொழுது குலசேகராழ்வார் எழுதிய பாசுரங்கள் சைவத் திருமுறைகளைப் போல் சற்றுக் கடினமாக இருப்பதையும் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் எளிய தமிழில் ஆழ்கருத்துகளோடு இருப்பதையும் கண்டு கொண்டேன். சைவப்பின்புலம் காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இந்தப் பாடலிலும் அவர் தில்லையில் இருக்கும் எல்லை இல் தூக்கத்து நாயகனைப் பாடுவதும் அந்த வகையில் பொருத்தமாகவே இருக்கிறது. அதற்கு நீங்கள் சொன்ன விளக்கமும் அருமை.

ஒரேயொரு கேள்வி.. தன் தாமம் மேவி.. இதில் தாமம் என்பது இடம் என்று பொருள் சொல்லியிருக்கிறீர்கள். தாமம் என்பது கயிறு என்று படித்திருக்கிறேன். தாம உதரன். இடம் என்றும் பொருள் வருமா?

enRenRum-anbudan.BALA said...

ராகவன்,
வருகைக்கு நன்றி. தாமம் என்றால் “பொதுவாக” கயிறு தான். அதனால், தான் நான் தாமத்துக்கு

பூமாலை; கயிறு; வடம்; நகரம்; ஊர்; மலை; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு;

என்று பல பொருள்கள் உண்டென்று குறிப்பிட்டு எழுதினேன்.
தாமம் என்பதற்கு பரமபதம்/வைகுண்டம் என்ற பொருளும் கூட உண்டு. அதாவது. கயிற்றைப் பற்றுவது போல, பரமன் திருவடிப் பற்றி, பரமபதத்தைப் பற்ற முடியும். பற்றுவதால், கயிறும் மோட்சமும் ஒன்றே :-))))

enRenRum-anbudan.BALA said...

ராகவன்,

ஒண்ணு சொல்ல விட்டுப் போச்சு. ”தில்லையில் இருக்கும் எல்லை இல்” - நன்று... வர வர ’எதுகை மோனை’ செம்மையாகிட்டு வருது :-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails